Sunday, May 10, 2015


       அம்மா


உசுருக்குள்ள உசுரவச்சு
உதிரப்பாலை ஊட்டி ஊட்டி
உசுர வளர்த்தவளே !
உலகைக்கொடுத்தவளே !

ஒரு நொடியும் நெடு நொடியாய்
ஒன்பது சொச்சம் மாதங்களாய்
தன்னை உருக்கி
என்னை வடித்தவளே !

ஒன்னோட கதகதப்பில்
உள்ளிருந்த பொழுதுகளில்
எனக்கு உருகொடுக்க
எத்தனையோ பத்தியங்கள்

அத்தனையும் ஏற்றவளே !
அரு மருந்தாய் காத்தவளே !
வந்து பிறந்திடம்மா : என்
வம்சத்தின் சிசுவாக !

Sunday, December 14, 2014

அப்பா


   அப்பா   

இழப்பின் வலியில்
இருப்பின் வலிமை
புரிகிறது
இன்று
அப்பா இல்லை

முன்னெப்போதுமில்லாத
வெறுமையின் அடர்த்தி
சூழ்ந்த்ததானஉணர்வு

அப்பாவின்
ஆன்மீகம்  தவிர்த்து
அனைத்துநற்ப்பண்புகளோடான
பொதுனலச்சிந்தனை
எனக்குள்
பதியம்போட்டுக்கொண்டது
தானாக

பொதுநலன் சார்ந்த
அவரின் சுவடில்
பயணிப்பதற்கான
சக்தியை
உறவும் நடப்பும்
கொடுக்குமென்ற நம்பிக்கையில்
தொடர்கிறது
ஈன்றோரற்ற  இன்னொரு
புதுப்பயணம் 


.


Saturday, December 6, 2014

போலிகள் போகட்டும்


போலிகள்  போகட்டும் 
.....................................................................  


யாரோவாகிப்போகிறார்கள்

மனித ஒட்டுண்ணி
மனிதன்
அடையாளம் கண்டவுடன்
யாரோவாகிப்போகிறார்கள்

சோளம்விதைத்துவிட்டு
நெல்அறுவடைக்கு
காத்திருக்கும்
பேராசையைச் சுட்டியதும்
யாரோவாகிப்போகிறார்கள்

கதாநாயகர்களாக
காட்டிக்கொண்டவர்கள்
வில்லனாக
அறியப்பட்டதும்
யாரோவாகிப்போகிறார்கள்

போலத்தெரிவதன்றி
வேறேதுமில்லாதவர்கள்
ஏமாற்றுவதற்கான வெளி
பரந்துகிடப்பதால்.....
யாரோவாகிப்போகிறார்கள்

யாரோவாகிப்போகட்டும்
வருத்தமில்லை !
உதிரத்தை உறிஞ்சும்
அட்டைகளாயில்லாமல்....
மனிதர்களாய் மாறிடும்
உறுதியோடு போகட்டும் !

                                                

Sunday, May 25, 2014

தென்றலுக்கு பிறந்தநாள்         


           
           நீ
            கலங்கும்போது                            
            கரைந்துபோகிறோம்
            துயருரும்போது
            தொலைந்துபோகிறோம்
           
            தென்றலின்
            திசையை
            தீர்மானிப்பதற்க்கு
            எவருமில்லை உலகில் .....
            எதுவாகினும் அதைக்கடந்திடும்
            ஆற்றலும் சக்தியும்
            தென்றலுக்குண்டு.

            பொதிகையில்
            பிறந்தாலும்
            உலகைவலம்வரும்
            தென்றலே ......
             உன்னை
            வாழ்த்துவதில்
            உவகைகொள்கிறோம்

                                                   அப்பா அம்மா தம்பி இன்னும்  எல்லோரும்      

Monday, April 14, 2014

Annal 14.04.2014                           அண்ணல் --06.12.2016                                                   
சிலுவை சுமக்காத
மீட்பரே !

இந்த
தேசத்தில்
கடவுளுக்கு அடுத்து
உனக்குத்தான்
சிலைகள் அதிகம்
ஏனெனில்
எளியோர் வழிபடும்
தெய்வம் நீதானே 

Tuesday, November 29, 2011

25.12.2013 வெண்மணிதேசமெங்கும்
தீண்டாமைத்தீயில்
வெந்து மடிந்த
விட்டில்பூச்சிகளை
நினைவு கொள்கிறோம் !
**
நிழலை நம்பி
நிஜத்தைப்பலியிடுவோர்
நிறைந்த தேசம் !
**
பன்றிகளும் பசுவும்
தெய்வமாயிருக்க
மனிதனை ஒதுக்கும்
மடமைமிகு தேசம் -இந்த
மா... பெரும் தேசம் !
**
வேற்றுமையில்
ஒற்றுமை என
வேடிக்கை காட்டும்
விலங்குகளின் சரணாலயம் !
**l
முளைவிடும் விதைகளை
மரங்களே அழித்திடும்
வினோத வனம் !
**
இங்கே
சிங்கங்கள்கூட
சிநேகமாய் இருக்க.....
குரங்குகளின் உறுமலும்
குள்ளநரிகளின் ஊளையும்
குறைந்தபாடில்லை இன்னும் !
**
காலனிக்காரனுக்கு
காலணியாய கிடந்த
காலணிகள் -இன்று
சிரசு தேடுகின்றன மகுடமாகிட!
                                       தலை குனிந்தது போதும் .......
                                     
                                              ****